தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் அமைக்கப்பட்டுள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இன்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியாரின் கொள்கைக்கு, முன் எப்பொழுதும் இருந்ததைவிட, தற்பொழுது அதிகத் தேவை உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து வீரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்தி ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக வரவேண்டுமென உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்துத் தெரிவித்து, காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்ய முற்படுகிறார். இதனால், இன்று தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலும், ஆந்திராவிலும் என எங்குப் பார்த்தாலும் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழிகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணையில் உள்ளபடி ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் இருக்க வேண்டுமென்ற எண்ணம், எல்லாப் பகுதிகளிலும் பரவி உள்ளது. இந்தி மொழியை எதிர்த்து வரும் 20ஆம் தேதி திமுக சார்பில் தனியாகப் போராட்டம் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் தோழமைக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து போராட்டம் நடத்தப்படும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார்” என்றுக் கூறினார்.
மேலும், புதிய கல்விக் கொள்கையைப் பற்றி அவர் பேசுகையில், “தற்பொழுது ஆளும் மத்திய அரசிற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர், சமூக நீதிக்கு எதிராக உத்தரவுகள் போட்டு வருகின்றனர். இதனால் சமூக நீதிப் பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கொண்டு வருவது, குலக்கல்வித் திட்டத்தைவிட மிக மோசமானது. அதிகப்படியான தேர்வுகள் மாணவர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும், மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இந்தப் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியவர்கள், கல்வியாளர்கள் அல்ல.
இந்தக் குழுவில் எந்தத் துணை வேந்தர்களும் இடம்பெறவில்லை. மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை, மறைமுகமாகத் தமிழ்நாடு அரசு மூலம் திணிக்கிறது. நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்துவது போல், மத்திய அரசு, தமிழ்நாடு அரசின் மூலம் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு நுழைவுத்தேர்வு, பத்து, பதினொன்று மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளையும் நடத்துகிறது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கானப் பொதுத்தேர்வை உடனடியாக கைவிடக்கோரி நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தி வருவதாகக் கூறும் இந்த அரசு, சமூக நீதியை மறந்து, வேறு பாதையில் செல்கிறது. எனவே அவர்கள் தங்கள் பாதையைத் திருப்பி சரியான வழியில் பயணிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, பொன். ராதாகிருஷ்ணனின் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ”நன்றியைப்பற்றி, பொன். ராதாகிருஷ்ணன் பேசுவது வேடிக்கையாக உள்ளது. கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவிற்காக வாஜ்பாய் தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது, தமிழை ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக அறிவிக்கக்கோரி கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதை இன்றுவரை இவர்கள் நிறைவேற்றவில்லை. தமிழ் பெருமையான மொழி, தொன்மையான மொழி எனப் புகழ்வதால் எந்த பயனும் இல்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று, செம்மொழி நிறுவனத்தைக் கருணாநிதி திறந்து வைத்தார். ஆனால் அந்த நிறுவனம், தற்பொழுது தினக்கூலிக்கு ஆள்பிடித்துக் கொண்டிருக்கிறது. செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள். ஆனால் தமிழுக்கு 3 கோடி ரூபாய்தான் ஒதுக்குகிறார்கள். இதற்கு யார் காரணம்? ஆக, நன்றி மறந்தவர்கள் யார் என்பதை பொன். ராதாகிருஷ்ணன்தான் விளக்க வேண்டும்” என பதிலளித்தார்.