தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மேயர், தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது என, கடந்த நவம்பர் 19ஆம் தேதி தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்தச் சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு கட்சியை சேர்ந்தவரும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தால், மன்றத்தை சுமூகமாக நடத்த முடியாது. மேலும், இப்பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசின் அவசரச் சட்டத்தில் மறைமுகத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்பதால், இச்சட்டம் அரசியலமைப்பு, ஜனநாயகத்திற்கு விரோதமானது என வாதிட்டார்.
அப்போது, தன்னை குறிப்பிட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டுமென கூறுவது சட்டப்படியான உரிமைதானே தவிர, அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமை இல்லை என விளக்கமளித்த நீதிபதிகள், நேர்முகத் தேர்தலை மறைமுகத் தேர்தலாக மாற்றியதை ஜனநாயக விரோதமானது என்றோ, அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றோ கூற முடியாது எனக் கூறி திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஏலத்துக்கு வந்த பதவிகள் - ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சம்!