இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' சீனாவிலிருந்து ரேபிட் சோதனைக் கருவிகள் வாங்கியதில் இடைத்தரகர்கள் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருப்பது டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐந்து லட்சம் கருவிகள் வாங்கியதில் சுமார் 18 கோடி ரூபாய் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளனர். சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து 245 ரூபாய்க்கு வாங்கிய கருவியை 600 ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்துள்ளனர்.
இது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் முன்கூட்டியே தெரியாதா? தெரிந்துதான் இந்த இடைத்தரகர்களிடத்தில் ஒப்பந்தம் போடப்பட்டதா?
மக்களின் உயிர் காக்கும் கருவிகளை வாங்கும் விஷயத்திலேயே, இடைத்தரகர்கள் இம்முயற்சியை செய்துள்ளனர். எனவே, மத்திய அரசு இந்த நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி, மோசமான வணிக நடைமுறையைப் பின்பற்றிய இந்த நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும்.
இனி, இத்தகைய கருவிகளைக் கொள்முதல் செய்வதை ஐசிஎம்ஆர் பொறுப்பில் விடாமல் இதற்கென ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவே நேரடியாக அயல்நாடுகளிலிருந்து கருவிகளை தருவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த ஒப்பந்தங்கள் யாவும் வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ளப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 'சோதனைக் கருவிகள் மூலம் கொள்ளை லாபம் பார்த்திருப்பது ஈவு, இரக்கமற்ற செயல்' - கே.எஸ்.அழகிரி