சென்னை: மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக மரியாதை செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு வட்டார வழக்குச் சொற்களை இலக்கியத்தில் அறிமுகம் செய்து, ஒரு புதிய எழுத்து நடையை உருவாக்கியவர், கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயண் இறுதிச் சடங்குகளின்போது, தமிழ்நாட்டு அரசின் சார்பில் மரியாதை அளித்துச் சிறப்பித்ததற்கும், கோவில்பட்டியில் அவருக்கு சிலை நிறுவி, மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்ததற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மன்னர்கள் மணிமுடி தரித்துக் கொள்வார்கள். புலவர்கள் வாழ்த்துப் பா பாடுவார்கள். இந்த மக்கள் ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கூடமே போகாமல், ஏழை, எளிய மக்களின் உணர்வுகளை எழுத்தில் வடித்த ஒரு எழுத்தாளனுக்கு, அரசு சிறப்பு செய்து இருக்கின்றது. புதுவை பல்கலைக்கழகம், மதிப்புறு பேராசிரியராக ஆக்கி அழகு பார்த்தது.
இலக்கியவாதிகளுக்கு, அரசு மரியாதை செய்யும் வழக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்படுத்தி இருப்பது இலக்கியத் துறையினருக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், பெருமகிழ்ச்சி அளித்து இருக்கின்றது. அதற்காக, முதலமைச்சரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்" என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.