இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேடந்தாங்கல் பறவைகள் புகலிடம் சுமார் 30 ஹெக்டேர் பரப்பில் அமைந்திருக்கின்றது. பல நாடுகளில் இருந்தும் சுமார் 5,000 முதல் 10,000 கிலோமீட்டர் வரை பறந்து பறவைகள் இங்கு வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்கின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வேடந்தாங்கலில், சுமார் 40 விழுக்காடு பரப்பில், தொழில் துறை சார்ந்த உரிமங்களை வழங்க, தமிழ்நாடு அரசு முனைகின்ற செய்திகள் வேதனையை ஏற்படுத்துகிறது.
சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப் பகுதியை, 3 கிலோமீட்டர் என்கிற அளவிற்குச் சுருக்குவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, தேசியக் காடுகள் உயிரியல் வாரியத்திடம், தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அப்படிச் செய்வதால், பலவகை உயிர்களின் பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தலைமை வனப் பாதுகாவலரைக் கட்டாயப்படுத்தி அறிக்கையும் பெற்றிருக்கின்றனர். அதைச் சுற்றுச்சூழல் துறைச் செயலரும் பரிந்துரைத்திருக்கின்றார்.
தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு வேறு எவ்வளவோ இடங்கள் இருக்கும்போது, வேடந்தாங்கலைக் குறிவைப்பது, இயற்கை பேரழிவுக்குத்தான் வழிவகுக்கும். பறவைகள் வாழிடத்தின் பரப்பைப் பெருக்குவதற்கும், விரிவுப்படுத்துவதற்கும்தான் அரசு முயற்சிக்க வேண்டும். மாறாக, வேடந்தாங்கலின் பரப்பளவைக் குறைக்க முனையும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; மத்திய அரசும் அதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மின்கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான்'- பாலகிருஷ்ணன் அறிக்கை