சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"கடந்த 1967 ஜூன் 23 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா அவர்கள் தலைமையிலான அரசு, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணை ஒன்றை வெளியிட்டது.
குறள்வழியிலான ஓவியம்
அதன்படி, ஒவியர் கே.ஆர். வேணுகோபால் சர்மாவால் வரையப்பட்டு, தமிழ்நாட்டில் அரசியல், மொழி, கலை சார்ந்த அறிஞர் பெருமக்களால் ஒருமனதாக வழிமொழியப்பட்டு, ஒன்றிய-மாநில அரசுகளால் ஏற்பு அளிக்கப்பட்ட திருவள்ளுவர் திருஉருவப் படம், தமிழ்நாடு முழுமையும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல்நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டது. சாதி, மத பேதம் அற்ற பொதுநோக்கம், குறள்வழியில் நிலைநிறுத்தப்பட்டது.
குறள் ஓவியம் தந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை அமைத்தார்; கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு சிலை நிறுவி, வள்ளுவத்தின் புகழை உலக அறியச் செய்தார். ஆனால், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், திருவள்ளுவரின் உண்மை உருவத்தை படிப்படியாக மறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அமைச்சர்களின் அறைகளில் இருந்த, திருவள்ளுவரின் ஓவியம் காணாமல் போயிற்று. அரசு அச்சகத்திலும் புதிய படங்கள் அச்சிடுவது படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
மதசாயத்தை ஒழிப்போம்
அதன்பிறகு, மெல்லமெல்லத் தங்கள் சுயநல மத அரசியலை, திருவள்ளுவரின் மேல் போர்த்தத் தொடங்கினர். திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசத் தொடங்கினர்.
காப்பு உரிமை பெறப்பட்ட, ஒன்றிய, மாநில அரசுகளால் ஏற்பு அளிக்கப்பட்ட, அரசு உடைமை ஆக்கப்பட்ட அந்தத் திருவள்ளுவர் ஓவியம், அண்ணாதுரை, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பொலிவு பெற்று இருந்ததுபோல், மீண்டும் பொலிவு பெற வேண்டும். அனைத்து அமைச்சர்கள், அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் ஓவியப் படம் இடம் பெறச் செய்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.