கரோனா வைரஸ் பரவல் காரணமாக வணிக வளாகங்கள், திருக்கோயில்கள், நூலகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மார்ச் கடைசி வாரத்தில் மூட அரசு உத்தரவிட்டது. பின்னர் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் அரசு அறிவித்தபடி நேற்று முதல், நூலகங்கள், கோயில்கள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டன. இருப்பினும், பராமரிப்பு பணி காரணமாக வடபழனி முருகன் கோயில் மட்டும் நேற்று திறக்கப்படவில்லை.
இந்நிலையில், பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து வடபழனி முருகன் கோயில் மக்கள் வழிபடுவதற்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கோயில்களை திறக்க அரசு முன்னரே அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி, காலை முதல் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
அதன்படி, கோயிலின் உள்ளே நுழையும் முன்பாக அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வந்ததுடன், உடல்வெப்ப சோதனைக்கும் உட்படுத்திக்கொண்டனர். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி, தனிமனித இடைவெளியுடன் வழிபாட்டில் பங்கேற்றனர். திருநீரு, குங்குமம் ஆகியவை கைகளில் அல்லாமல், பக்தர்களுக்கு பொட்டலங்களில் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் கோயில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்று தரிசனம் செய்த பின்பு வெளியே வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ந்து கரோனா தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டதால் மக்கள் அதிகாலையிலேயே வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: செப். 7 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை!