கோவை மாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிமுகம் செய்துவைத்தார். இந்தத் திட்டம் மக்களுக்கு உகந்தது அல்ல, இந்தத் திட்டத்தால் பல நோய்கள் பரவும் போன்ற பல தவறான தகவல்களை, கோவையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பியதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில் ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பிணை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாகீர் உசேன் மனு தாக்கல் செய்தார். வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி சேஷசாயி, மனுதாரர் பரப்பிய அடிப்படை ஆதாரமற்ற தகவல்களால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது என்றும் இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் பொய்யான தகவல் பரப்புவதே மிகப்பெரிய மாசாக உள்ளது எனவும் கூறி வேதனை தெரிவித்தார். மனுதாரர் தன் தவறை உணர்ந்து, தான் எந்த வித ஆதாரமும் இல்லாமல் தகவல் பரப்பியதாக அதே வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட சம்மதித்தால், அவருக்குப் பிணை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தான் வாட்ஸ் அப்பில் அனுப்பிய தகவல் தவறானது, ஆதாரமற்றது என வாட்ஸ் அப் மூலம் மறுப்பு தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஜாகீர் உசேனை பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: போலி செய்தியாளர்கள் குறித்த வழக்கு - பிப்., 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!