சென்னை: தமிழ்நாட்டில் உள்ள முதியோர் இல்லங்களை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, முதியோர் இல்லங்களை ஆய்வு செய்வது, பதிவு செய்யப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்பது, பதிவு செய்வது கட்டாயம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை என கிருஷ்ணமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதேபோல அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அரசாணையை அமல்படுத்தக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, அரசாணை செல்லும் எனக்கூறி, அதில் தலையிட மறுத்து, அரசாணையை எதிர்த்த வழக்குகளையும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும், முடித்து வைத்தது. அதேநேரம் அனைத்து முதியோர் இல்லங்களை ஆய்வு செய்யவும், அரசாணையை அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், முதியோர் இல்லங்களில் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
குறைபாடுகளை சுட்டிக்காட்டிய பின்னரும் நிவர்த்தி செய்யாத முதியோர் இல்லங்களின் பதிவுகளை ரத்து செய்யவும், முதியோர் இல்லங்களில் தங்கி இருப்பவர்கள் மற்றும் நிர்வாகிகளின் விவரங்களை பராமரிக்கவும், மூத்த குடிமக்கள் புகார் அளிக்க ஏதுவாக தனிப்பிரிவை தொடங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யப்படாதவை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பித்த அரசாணை அடிப்படையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என்றும் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்