பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தப்படியான முக்கிய பொறுப்பில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை சென்னை வருகிறார். அதையொட்டி, மூன்றாயிரம் காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
விமானம் மூலம் பிற்பகல் 1.40 மணியளவில் சென்னைக்கு வரும் அமித்ஷா, லீலா பேலஸில் தங்குகிறார். பின்னர், 4.25 மணியளவில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப்பணி உள்பட பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க உள்ளார்.
இதனால் விமான நிலையம், லீலா பேலஸ், கலைவாணர் அரங்கத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த விதமான அசாம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க, சென்னை முழுவதும் மூன்றாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கமாண்டோ படையினர், ஆயுதப்படையினரும் கூடுதலாக பணியில் ஈடுபட இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.