சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மார்ச் 21) பரப்புரையில் ஈடுபட்டார். மாடங்குப்பம் குடியிருப்பு பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் அதிமுகவினர் வாக்குக்குப் பணம் அளித்தது தொடர்பாக புகார் அளித்துள்ளோம், நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்' என்றார்.
'ஜெயலலிதா மரணத்தை ஓபிஎஸ் கொச்சைப்படுத்துகிறார், சந்தேகம் இருக்கிறது என சொல்லிவிட்டு சம்மன் அனுப்பியும் ஆஜராக மறுத்திருக்கிறார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆணையம் அமைத்து விசாரிப்பது அதிமுகதான், மூன்றாண்டுகளாகியும் உண்மை வெளிவராததால்தான் நாங்கள் கேட்கிறோம்' என்றார்.
மேலும், ஜெயலலிதா இரும்புப் பெண் என பெருமையாக பேசுகின்றனர். அப்படியிருக்க, திமுக தொடர்ந்த வழக்கினால் அவர் இறந்துவிட்டாரா என்ன என உதயநிதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் சிஏஏ குறித்த அறிவிப்பை ஏற்கமுடியாது என பாஜக மறுத்துவிட்டது. அதிமுக கூட்டணி முரண்பாடுகள் நிறைந்த, தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சித்தார்.
மேலும், பத்து வருடங்களாக ஆட்சியில் இருந்து செய்யாததையா தேர்தல் அறிக்கையில் அறிவித்து அதிமுக செய்ய போகிறது என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: அதே டெய்லர்; அதே வாடகை: திமுக, அதிமுக விளம்பரங்களில் ஒரே நபரின் முகம், காரணம் என்ன?