இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சாரம் இன்றி வாழ்க்கையும் இல்லை, வாழ்வாதார சிறு, குறு, உறு தொழில்களும் இல்லை. அந்த மின்சாரத்தை விலையேறப்பெற்ற பொருளாக மாற்றவே ’புதிய மின்சார திருத்தச் சட்டம்’ என்பதைக் கொண்டுவரப் பார்க்கிறது மோடி அரசு. அதற்காக ‘மின்சார சட்ட திருத்த மசோதா - 2020’ஐ, இந்தக் கரோனா சமயம் பார்த்து, கடந்த ஏப்ரல் 17 அன்று, மாநிலங்களின் கருத்தறிய என்று மோடி அரசு அனுப்பியது. இதற்கு முழு முதல் காரணமே, உதய் மின் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதுதான்.
இந்தப் புதிய மின்சாரச் சட்டத்தால், தமிழ்நாட்டில், விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்துக்கும் ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையான இந்த இலவச மின்சாரத்தைப் பெற தமிழக விவசாயிகள் மாபெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.அதில் 64 விவசாயிகள் தம் இன்னுயிரை இழந்தனர். கடைசியில் முதலமைச்சர் கலைஞர், விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்தையும், ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தையும் கொண்டு வந்து சமூக நீதியை நிலைநாட்டினார். இதனால் சிறு விவசாயம், கைத்தறி நெசவுத் தொழில்கள், ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வந்தனர். இதையெல்லாம் ஒழித்துக்கட்டவே ஒன்றிய அரசு இப்போது ‘மின்சார சட்ட திருத்த மசோதா - 2020’ஐ அனுப்பியுள்ளது.
இந்த மசோதாவில், மாநில மின்சார வாரியங்களைப் பிரித்து, வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. விநியோக நிறுவனங்களாக மாற்றுவது என்பது, தனியாருக்கே விநியோகிக்கும் உரிமையைத் தாரைவார்ப்பதாகும். அப்போது மின் கட்டணம் வசூலிக்கும் உரிமையும், மின் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் கூட தனியாருக்கே வந்துசேரும். ஆக, சேவைத் துறையாக இருந்துவரும் மின்துறை, வர்த்தகத் துறையாகிவிடும் என்பது மட்டுமல்ல, மின் கட்டணமும் நம் கையை மீறி உயர்ந்துவிடும்.
இதனால் மத்திய அரசு, புதிய மின்சாரத் திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். அதிமுக அரசு இதற்குத் துணை போகக்கூடாது“ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’வரைவு மின்சார சட்ட திருத்தத்தைக் கைவிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்’