சென்னை: அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சசிகலாவை வரவேற்க, விழாக்கோலம் பூண்டு நீங்கள் செய்து வரும் ஏற்பாடுகளைக் குறித்த செய்திகள் எல்லா ஊர்களிலிருந்தும் வந்தவண்ணம் இருக்கின்றன. தமிழ்நாடு முழுக்க தன்னெழுச்சியாக நடைபெறும் இந்த வரவேற்பு ஏற்பாடுகளைப் பார்த்துப் பதற்றமடைந்திருக்கும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலர், என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளவர்களே மக்களுக்குப் பீதி ஏற்படுத்தும் வகையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். 'எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்று இவர்கள் டி.ஜி.பி அலுவலகத்திற்குப் படையெடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால், திட்டமிட்டு எதாவது செய்துவிட்டு, ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் மீது பழியைப் போடுவதற்குத் தீட்டுகிறார்களோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்திருக்கிறது.
பதற்றத்தில் இருக்கும் இவர்கள், எத்தகைய பாதகத்தையும் செய்திடத் துணிந்தவர்கள் என்பதால் சசிகலாவுக்கு, நாம் அளிக்கும் வரவேற்பை மிகுந்த கவனத்தோடு அமைத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே டிடிவி தினகரன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியர் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு குறித்து பதிவிட்டிருக்கிறார்.
அதில், “பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல நாட்களாகப் போராடி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாசிரியர்கள் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆகியோரை தமிழ்நாடு உடனடியாக அழைத்துப் பேசி உரியத் தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆசிரியப் பெருமக்களைத் தொடர்ந்து போராட விட்டு, வேடிக்கை பார்ப்பது சரியானதல்ல. அவர்களின் கோரிக்கைகளை சட்டப்படி நிறைவேற்றித் தருவது அரசின் கடமை என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.