சென்னை: திருவள்ளூர் மாவட்ட அமமுக செயல் வீரர்கள் கூட்டம் ஆவடி அருகே அயப்பாக்கத்தில் நேற்று (ஜூன்.26) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என சூளுரைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் , "இருபத்தி மூன்றாம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் அதிமுக வரலாற்றில் நடந்த ஒரு கருப்பு தினம்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பொதுக்குழு கூட்டங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த சரித்திர நிகழ்வாக இருக்கும். அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என மு.க. ஸ்டாலின் விமர்சனம் பற்றி செய்தியாளர் கேட்டதற்கு "தீயசக்தி கருணாநிதி என கூறி தான் எம்ஜிஆர் அரசியல் களம் கண்டார். அதே போல அவரை பின் தொடர்ந்து ஜெயலலிதாவும் அரசியல் களம் வந்தார்.
ஆனால், அதன்பிறகு தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமிரில் ஸ்டாலின் இவ்வாறு பேசி வருகிறார். அமமுக என்ற ஒரு கட்சி இருக்கிறது என்றும் இதில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து இவ்வாறு பேசி வருகிறார். நாங்கள் கண்டிப்பாக திமுகவுக்கு சாவுமணி அடிப்போம்" என்றார்.
அதன் பின், நீங்கள் அதிமுகவில் இணைவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு , "அதிமுக அயோக்கியர்களின் கூடாரம் ஆகிவிட்டது. ஆகவே, வருங்காலத்தில் ஜெயலலிதாவின் கொள்கைகளை முன்னிறுத்தி ஆட்சி அமைப்போம். அதன் பின்னர் அதிமுகவை மீட்டெடுப்போம்.
ஜெயலலிதாவின் இயக்கம் தவறானவர்களின் கைகளில் மாட்டிக் கொண்ட காரணத்தால் தான் நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினோம். அதோடு தற்போது இரட்டை இலை சின்னம் எம்.ஆர் ராதா கையிலும் வீரப்பா போன்ற வில்லன்களின் கையிலும் மாட்டி உள்ளது. அதனை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள்தான் மீட்டு எடுப்பார்கள்.
ஓ.பன்னீர் செல்வத்தை ரகசியமாக சந்திக்க எந்தவித தேவையும் இல்லை, பல கோடி ரூபாய் செலவு செய்து பொதுக்குழுவைக் கூட்டியும் நீதிமன்றம் தலையிட்டதால் எடப்பாடி பழனிச்சாமி நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்பதால் அவர்கள் ஏதேதோ பேசி வருகின்றனர்.
தற்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை மூன்று கோடி, நான்கு கோடி, 5 கோடி என பணம் கொடுத்து வாங்கி பொதுச்செயலாளர் பதவிக்கு வரும் வேலை நடந்து வருவதாகவும் அதற்காக எடப்பாடி பழனிச்சாமி அசுர ஆட்டம் ஆடி வருவதாகும், அதனால், அதிமுக இயக்கம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தினகரன் கூறினார்.
இருபத்தி மூன்றாம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் வாட்டர் பாட்டிலால் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு , "நல்வாய்ப்பாக வாட்டர் பாட்டிலால் மட்டும்தான் அவர் தாக்கப்பட்டார். அந்த கூட்டத்தில் இருப்பவர்கள் இதை விட ஆபத்தானவர்கள். ஆனால் மிக தைரியமாக அங்கு சென்று பொதுக்குழுவில் கலந்து கொண்ட ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
ஐபிஎல் ஏலம் போல கட்சி நிர்வாகிகளைப் பல கோடி கொடுத்து வாங்கினாலும் எடப்பாடி பழனிச்சாமி நினைத்தது நடக்காமல் போய்விட்டது. இரட்டை தலைமை பிரச்சனை காரணமாக திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தற்போது யாரும் பேசுவதே இல்லை. அதனால், முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நடைபெறுவதையும் அதற்கு மு.க ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும். பொதுக்குழுவில் கைமாறிய பணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முறையாக கைப்பற்றியிருந்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும்.
ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஏழு மாதமாக அதற்கு அனுமதி அளிக்காமல் திமுக அரசு இருப்பது ஊழல் அதிகாரிகளுக்கும் திமுக அரசுக்கும் தொடர்பு இருப்பதையே காட்டுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு திராவிடனும் தலைகுனியும் வகையில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் தான் உள்ளது" என்றும் தினகரன் கூறினார்.