அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு 08.10.2021 அன்று இணையவழி முறையில் திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகைத் தொகையினைச் செலுத்தும் வசதியைத் தொடங்கிவைத்தார்.
இணையம் மூலம் வாடகை, குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரர், வாடகைதாரர்கள் வழக்கம்போல் திருக்கோயில் அலுவலகத்தில் தொகையைச் செலுத்தி கணினி மூலம் ரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது வாடகை, குத்தகைத் தொகையினை காசோலை மூலமாகவும் செலுத்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காசோலை மூலம் வசூல் செய்யும்பொழுது, வாடகைதாரர்கள் தங்களால் வழங்கப்படும் காசோலைக்குரிய தொகை வங்கிக் கணக்கில் உள்ளது எனவும், வங்கிக் கணக்கில் போதிய தொகை இல்லாமல் காசோலை திருப்பப்பட்டால் வாடகைதாரர்கள் மேல் எடுக்கப்படும் குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவதற்கான சம்மத கடிதத்துடன் காசோலையை வழங்க வேண்டும்.
வாடகை, குத்தகைத் தொகையை வசூல் செய்யும்பொழுது, நாளது தேதி மட்டுமே குறிப்பிட்டு காசோலை பெற வேண்டும். எக்காரணம் கொண்டும் பின் தேதியிட்ட காசோலை பெறக்கூடாது.
காசோலை நிபந்தனையுடன் பெற்றுக்கொள்ளும் சமயம், எந்தவொரு காரணத்திற்காகவும், வாடகை, குத்தகைத் தொகை திருக்கோயில் கணக்கில் சேரும்வரை ஒப்புகைச் சீட்டு (ரசீது) வழங்கப்படுதல் கூடாது எனவும், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இனி வருங்காலங்களில் வாடகை, குத்தகைத் தொகையினை கணினிவழி மூலமாகவும், காசோலை மூலமாகவும் தொகையினைச் செலுத்தி திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: நகராட்சித் தேர்தல்: பொறியியல் தேர்வுத் தேதியில் மாற்றம்