சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து பல பிரச்சினைகள் இருந்துவரும் நிலையில், அதே சமயம் சமீபத்தில் பள்ளிக்குச் சென்ற பல மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்தச் சூழலில், தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தும் வாகனங்களின் தரம் குறித்து அனைத்து ஆர்.டி.ஓ.க்களும் ஆய்வுசெய்ய வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை ஆணையர் சந்தோஷ் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அந்தந்த ஆர்.டி.ஓ.க்களும் அவரவர் கட்டுப்பாட்டுக்குள்பட்ட தனியார் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
இது குறித்து போக்குவரத்துத் துறை அலுவலர்கள் கூறியதாவது, “தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பல பள்ளிகளில் வாகனங்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக 15 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே ஆய்வுசெய்யப்பட்டுள்ளன.
மேலும், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மற்ற பேருந்துகளையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். ஆய்வுசெய்யப்படாத பேருந்துகளை இயக்கினால் கட்டாயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.