சென்னை: கரோனா காரணமாக நீண்ட நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் சேவைகள் இன்றுமுதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
கரோனா பாதிப்பு காரணமாக சென்னை தவிர தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவந்தன. நோய்த்தொற்று அதிகரித்ததால் அவை நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது நீண்ட நாள்களுக்குப் பிறகு சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை, காரைக்குடி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சிறப்பு ரயில் சேவை இன்றுமுதல் தொடங்கியது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலுள்ள பல்வேறு நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, நுழைவு வாயில் வழியாக மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் நிற்கவைத்து தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, பயணச்சீட்டு பரிசோதிக்கப்பட்டு ரயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக கூடுதலான ரயில்வே பணியாளர்களும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பயணிகளுடன் நெருக்கமாகத் தொடர்பில் வரும் ரயில்வே துறை பணியாளர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்கள் உள்ளிட்டவர்களுக்கு முகக்கவசத்துடன், நெகிழியால் ஆன முகத் திரையும், கையுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.
ரயில் நிலையம் முழுவதும் இயந்திரம் மூலமாக கிருமிநாசினி கொண்டு தொடர்ந்து தூய்மைப்படுத்தப்பட்டுவருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஒவ்வொரு பெட்டியிலும் குறைந்த அளவு பயணிகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
ரயில்கள் செயல்பட அனுமதி வழங்கினாலும் அச்சம் காரணமாக அதிக அளவிலான பயணிகள் முன்பதிவு செய்யவில்லை. இதனால் ரயில்கள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு பயணிகளுடனே இயக்கப்படுகின்றன. அடுத்து வரும் நாள்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அலுவலர்கள் கூறுகின்றனர்.