சென்னை: குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு வந்தது.
அந்த ரயிலில் வந்த ஒரு சரக்குப்பெட்டியில் 50-க்கும் மேற்பட்ட பார்சல்களில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புடவைகள் கொண்டு வரப்பட்டன.
பார்சல்கள் திருட்டு
பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த அந்த ரயிலில் ரயில்வே அலுவலர்கள் சரக்குப் பெட்டியின் கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது உள்ளே இருந்த பார்சல்கள் கலைந்து கிழிந்து போய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், ரயில் மேற்கூரையில் மிகப்பெரிய ஓட்டை ஒன்று இருந்ததையும் கண்டறிந்தனர். அந்தப் பெரிய ஓட்டையில் பார்த்தபோது, அந்த ஓட்டை மற்றொரு பெட்டியின் கழிவறை வரை சென்றிருந்தது.
கழிவறையில் இருந்து ஓட்டைப் போட்டு சரக்குப் பெட்டிக்குச் சென்ற திருடர்கள் அங்கிருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய 12 புடவை பார்சல்களைத் திருடியது தெரியவந்தது.
செல்போன் சிக்னல் மூலம் சிக்கிய திருடன்
இந்த விவகாரம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் எந்த தடயமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும் நாக்பூர், பார்தா ரயில் நிலைய சந்திப்பில் இதேபோன்று கொள்ளை நடந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை ஆர்.பி.எப் காவல் துறையினர், சரக்குப் பெட்டியின் பக்கத்துப் பெட்டியில் பயணித்த பயணிகளின் செல்போன் எண்கள், பழைய வழக்கில் தொடர்புடைய நபர்களின் செல்போன் எண்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது பழைய கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர், அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்தது தெரியவந்தது.
திருடன் கைது
இதுகுறித்து ஆர்.பி.எப் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். ஆனால், கரோனா பரவல் காரணமாக விசாரணைக்கு காலதாமதம் ஏற்பட்டது.
தற்போது கரோனா பரவல் குறையத்தொடங்கிய நிலையில் சென்னை ஆர்.பி.எப் காவல் துறையினர், நாக்பூர் சென்று மொமின்புரா என்ற பகுதியில் இருந்த முகமது ஜஸ்டின் (32) என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ரயில் கழிவறையில் இருந்து துளையிட்டு சரக்குப் பெட்டிக்குச் சென்று புடவைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்த காவல் துறையினர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஏழு வீடுகளில் தொடர் கொள்ளை: வெளியான சிசிடிவி