திருபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெறக் கோரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூடங்குளம் அணு உலை அமைப்பதற்கு எதிராக அற வழியில் போராட்டம் நடத்திய மக்களுக்கு எதிராக இந்திய அரசாங்கம் பல்வேறு குற்றப் பிரிவுகளுக்குக் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளன. இது ஒரு நபர், இரு நபர் என்றல்ல, ஆயிரக்கணக்கான மீனவ, எளிய மக்கள் மீது இப்படி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த உலகத்தின் பல இடங்களில் அணு உலை விபத்துகள் நடந்துள்ளன. அப்படி இருக்கையில், மக்களுக்கு அது குறித்து இருக்கும் அச்சம் சாதாரணமானதுதான். அதற்கு எதிராக மக்கள் போராடினால், இப்படி வழக்குத் தொடுப்பதா? இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், வழக்குகளைத் திரும்பப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசோ, இந்த அரசின் கைப்பாவையாக இருக்கும் மாநில அதிமுக அரசோ, அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து என்றாரா பாலு - முரசொலி விளக்கம்
மேலும், இதுகுறித்து மக்களவையிலும் கேள்வி எழுப்பிய டி.ஆர். பாலு, எதிரில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமர்ந்திருந்ததைக் கண்டு, “மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கே தான் இருக்கிறார். கூடங்குளம் போராட்டக் குழு மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் குறித்த என் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். பதில் சொல்லுங்கள்,” என்றார்.