சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர் உயர்கல்வி பயிலும் விகிதத்தினை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்படுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில் நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் போன்ற இளநிலை கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும்.
இத்தொகை மாணவியின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படவுள்ளது. இதற்கான பதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள தகவலில், “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாணவியர்களின் விபரங்களை ஜூன் 30 ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர், இதற்கான காலக்கெடு ஜூலை 10 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது.
2021-22 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவியர்களும் https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்வியில் இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டும், பொறியியல் கல்வியில் இளநிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, 3 ஆம் ஆண்டு மாணவியர்கள் பதிவு செய்யலாம்.
மேலும் இது குறித்து கூடுதல் விபரங்களை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பம் செய்ய நாளை (ஜூலை 10) ஒரு நாள் மட்டுமே உள்ளதால் விண்ணப்பிக்காத மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து