கரோனா தொற்று சென்னையில் தீவிரமாகப் பரவிவருகிறது. தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஜூலை 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்தது.
பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி, சுகாதாரத் துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம் அமைத்து, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் பரிசோதித்து வருகின்றனர். இன்று மொத்தம் 514 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. அதிகபட்சமாக அண்ணாநகரில் 60 முகாம்களும், ராயபுரத்தில் 51 முகாம்களும் திரு.வி.கா நகரில் 49 முகாம்களும் நடைபெற்றன.
இன்று நடைபெற்ற மருத்துவ முகாம்களில் மொத்தம் 31ஆயிரத்து 196 பேருக்கு பரிசோதிக்கப்பட்டன. அதில், 1907 பேருக்கு சிறு அறிகுறி இருந்ததால் அவர்கள் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மருத்துவ முகாம் நடைபெறும் விவரத்தை அந்தந்த மண்டலங்களில் உள்ள மாநகராட்சி ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம் தினமும் அறிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 லாரிகள் - ஓட்டுநர் ஒருவர் உயிரிழப்பு