டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டு வந்த ஜெயக்குமாரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் ஒரு வடமாநிலத்துக்கும் சிபிசிஐடி காவல் துறையினர் விரைந்துள்ளனர்.
கடந்த 24ஆம் தேதி முதல் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வரை அவரைக் கைது செய்ய முடியவில்லை.
இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல் துறையினருக்கு ஜெயக்குமார், ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக கடந்த 1ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு விரைந்த சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஜெயக்குமார் செல்போன் பயன்படுத்தவில்லை என்றும், தனது மனைவியின் செல்போனை அவர் பயன்படுத்துகிறார் என்றும் தெரிய வந்துள்ளது. அவருடன் அவரது மனைவியும் தலைமறைவாக இருந்து வருகிறார். இவர்களைப் பிடிக்க இருவரின் உறவினரிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் ஜெயக்குமாரை தேடிய நிலையில் தற்போது பிற மாநிலங்களிலும் காவல் துறையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட காவலர் சித்தாண்டியிடம் நடத்திய விசாரணையில், டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் நேரடி தொடர்பு இல்லை எனவும், ஜெயக்குமாரிடம் பணம் மட்டுமே கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது: ' கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமாரின் அறிமுகம் சித்தாண்டிக்கு கிடைத்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் ஜெயக்குமாருக்கும் உள்ள தொடர்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது ' என்று கூறியுள்ளார்.
தனக்குத் தெரிந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி அடைய வைக்கப் பணம் வாங்கி ஜெயக்குமாரிடம் கொடுப்பதாக சித்தாண்டி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அதேபோல இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டி.என்.பி.எஸ்.சி மட்டுமல்லாமல், ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜெயக்குமார் டி.பி.ஐ அதிகாரிகளிடம் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருக்கலாம் எனவும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் - காவலர் சித்தாண்டியின் கூட்டாளி பூபதியிடம் தீவிர விசாரணை