டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு, தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துவருகிறது. இதனிடையே இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள சிபிசிஐடி காவல்துறையினர், இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார், பாலசுந்தராஜ், வெங்கடரமணன், மூன்று காவலர்கள், 23 அரசு ஊழியர்கள், ஐந்து தேர்வர்கள் என இதுவரை 45 பேரைக் கைது செய்துள்ளனர்.
இதனிடையே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான விடைகளை எடுத்துக் கொடுத்தது தொடர்பாக திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த செல்வேந்திரன்(வயது 45) என்ற ஆசிரியரை சிபிசிஐடியினர் தேடிவந்தனர். இந்த நிலையில், செல்வேந்திரன் இன்று சென்னை ஜார்ஜ் டவுன் விரைவு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோன்று டிஎன்பிஎஸ்சி வழக்கில் தேடப்பட்டுவந்த சென்னை கொளத்துரைச் சேர்ந்த பிரபாகரன்(25) என்பவரும் இன்று சென்னை எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது அவருக்கும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்ற காவல் அளிக்க எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்ற நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.
தொடர்ந்து தேர்வர் பிரபாகரன், செல்வேந்திரன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த கெஜ்ரிவால்