சென்னை: Tnpsc group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்குத் தமிழ் மொழியில் 40 மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் எனவும், அவர்களின் விடைத்தாளில் மட்டும், 'பி' பிரிவில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் திருத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர்வதற்குத் தமிழ் மொழியில் தகுதி பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.
இனி பொதுத் தமிழ், பொது அறிவு மட்டுமே போதும்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முந்தைய ஆண்டு தேர்வுகளில் பழைய பாடத் திட்டத்தில் பொதுத் தமிழ், பொது ஆங்கிலப் பாடம் இடம்பெற்றது.
அரசு கொண்டுவந்துள்ள புதிய மாற்றத்தின் அடிப்படையில் குரூப் 4 தேர்வில், பொது ஆங்கிலப் பாடம் இடம்பெறாது எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. ஆனால் குருப் 4-க்கு உரிய பாடத்திட்டம் மாற்றாமல் இணையத்தில் இருந்தது. இதனால் தேர்வர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான பாடத்திட்டத்தை இன்று வெளியிட்டுள்ளது. அதில், பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
மேலும், தமிழ் மொழியில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் (ஒ.எம்.ஆர்.) முறையில் 200 கேள்விகள், 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்பட்டுள்ளன.
40 மதிப்பெண்கள் எடுத்தால் விடைத்தாள் திருத்தப்படும்
மேலும் தமிழ் மொழித் தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பிரிவு 'பி' விடைத்தாள் திருத்தப்படும். மேலும், 40 மதிப்பெண்களுக்கு மேல் பெறப்படும் மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படும்.
தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டு, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்தியாவின் வரலாறு - பண்பாடு, இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்தியத் தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு - சமூக அரசியல் இயக்கங்கள், திருக்குறள், தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் என்ற தலைப்புகளில் பாடத்திட்டம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: உயர்மின் கோபுரத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் 200% இழப்பீடு கோருவதா? - செந்தில்பாலாஜி