தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், அதற்கு தேவையான பொருள்களை வாங்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, சென்னை தியாகராய நகரில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
கரோனா வைரஸ் இரண்டாவது அலை பல்வேறு நாடுகளில் உருவாகி இருக்கும் நிலையில், பண்டிகை காலத்தில் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்சியாக அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் பொது மக்கள் ஆர்வத்துடன் பொருள்கள் வாங்கிச் செல்கின்றனர்.
சென்னை தி.நகரில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூட்டம் குறைவாக உள்ளது. மின்சார ரயில்கள் இயக்காததாலும், கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் கூட்டம் பெரிய அளவில் காணப்படவில்லை. இருந்தபோதும், பொது மக்கள் வருகை தரும் வாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமி நாசினி கைகளில் தெளிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை காவல் துறையினர் உறுதி செய்கின்றனர்.