சட்டப்பேரவையில் இன்று பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வு செய்ய வழிவகை செய்யும், 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் ( திருத்தச் சட்டம்) என்ற சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவில், மேயர் மற்றும் தலைவர்கள், ஒரு குறிப்பிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பதாகவும், பெரும்பாலான மன்ற உறுப்பினர்கள் பிறக் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கும்போது, மேயர் மற்றும் தலைவர்கள் மன்ற உறுப்பினர்களிடமிருந்து ஒத்துழைப்புப் பெற தவறிவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் மற்றும் தலைவர்கள் தேர்தல் மறைமுகமாக நடத்தப்பட்டால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களிடையே நிலைத்தன்மை மற்றும் கூட்டுப்பொறுப்பு இருக்கும் எனவும், தேர்வு செய்யப்பட்ட அனைத்து மன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும், சுமூகமாக செயல்பட முடியும் எனவும், இதன் காரணமாக மாநகராட்சிகளின் மேயர் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவர்களுக்கு மறைமுகத் தேர்தலை நடத்தும் வகையில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் விவாதத்திற்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் ( இரண்டாம் திருத்தச்) சட்டம் மற்றும் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் ( இரண்டாம் திருத்தச்) சட்டமும் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
இதன் மூலம் பேரூராட்சிகள் , நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்குத் தேர்தல் நடைபெறும் வரை அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களில் உள்ள தனி அலுவலர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் உரை!