மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயபுரத்தில் மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.
அதன் பின் பேசிய கனிமொழி, தமிழ்நாடு மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மோசமான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. தண்ணீர் பிரச்னை எவ்வளவு மோசமடைந்துள்ளது என்றால் உலக நாடுகள் கவலைப்படும் அளவிற்கு தமிழ்நாடு தண்ணீர் பிரச்னை உள்ளது. இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தண்ணீர் பஞ்சம் இல்லையென்றும், அதனை திமுக தான் அரசியல் ஆக்குகிறது என்று அரசு கூறுகிறது. திமுக சார்பில் பல இடங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆர்ப்பாட்டம் நடந்ததால்தான் அதிமுக அரசு இந்த பிரச்னையில் சிறிது அசைவு கொடுத்துள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் இன்றைய அரசு தண்ணீர் தேவைக்காக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வராத காரணத்தால் தான் தண்ணீர் பிரச்னை இவ்வளவு பெரிதாக உருவாகியுள்ளது" என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "இந்த அரசை வீழ்த்த தேர்தல் வரை காத்திருக்காமல், இப்போதே தேர்தலுக்கு மக்கள் தயாராக வேண்டும்" எனவும் கூறினார்.