சென்னை: அத்தியாவசியப்பொருட்களை தமிழ்நாடு அரசு மானிய விலையில் பொது விநியோகத்திட்டத்தில் வழங்குவதால் விலைவாசி உயர்வு பாதிப்புக்குறைவாக இருப்பதாக, திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (செப்.21) செய்தியாளர்களைச்சந்தித்த அவர், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் வட மாநிலங்களில் விலைவாசி உயர்வு 27 விழுக்காடு வரை இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 4 விழுக்காடு அளவில் குறைவாக இருப்பதாகக் கூறினார்.
பொது விநியோகத்திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்துவதாகவும், இத்திட்டங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.7 ஆயிரத்து 500 கோடி அரசு செலவு செய்வதாகவும் தெரிவித்தார். மேலும், அரசு, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் வழங்குவதால் மக்கள் விலை உயர்வு பாதிப்பில் இருந்து காப்பற்றப்படுவதாகவும் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கூறினார்.
சிறப்பு பொது விநியோக திட்டத்தை ஆய்வு செய்ததில் அந்தியோதிய அன்ன யோஜனா திட்டத்தின்கீழ், வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மக்கள் 60 விழுக்காடு பேர் பயன் அடைந்துவருவதாகவும் தெரிவித்தார். ஒன்றிய அரசு குறைவான விலையில் பொது விநியோகத்திட்டத்திற்கான பொருட்களை வழங்கினால், இன்னும் கூடுதலான மக்கள் பயன் அடைவார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: 'சிந்துபாத்' பட பாணியில் மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?