சென்னை: தமிழ்நாட்டிலிலுள்ள 103 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி ஒன்றில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணி இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் தொகுப்பூதியத்தில் 2423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்வதற்கு உயர்கல்வித் துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
2018 -19 ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் தொடர்ச்சி ஒன்றில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் 15000 தொகுப்பூதிய அடிப்படையில்,1883 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2019- 20 கடந்த கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் 2423 உதவி பேராசிரியர் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் மாதம் 15,000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கு அனுமதி வழங்கி உயர் கல்வித்துறை உத்தரவிட்டது.
உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், “கல்லூரி கல்வி இயக்குனர் தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நல சங்கத்தின் கோரிக்கை அடிப்படையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2019- 20 ஆம் கல்வியாண்டு தொடக்கத்திலேயே 3443 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதில் மாணவர்கள் கல்விப் பணிகள் பாதிக்காத வகையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு உதவிப் பேராசிரியர் நியமனம் செய்யப்படும் வரை மாதம் பதினைந்தாயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அனுமதி கேட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் தற்போது உள்ள நிதி சூழ்நிலையில் கூடுதல் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்ய அனுமதிக்க இயலாத நிலையில், 2020-21 நடப்புக் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் முறையான உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரையோ அல்லது கல்வி ஆண்டின் இறுதி நாள் வரையோ இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தற்காலிகமாக நியமிக்கப்படுகிறார்கள். இதன்மூலம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 2423 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்த அனுமதி வழங்கப்படுகிறது.
அவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவதற்காக ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 21 கோடியே 80 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இதனால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் கௌரவ உதவிப் பேராசிரியராக பணி புரிந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 1661 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் சுழற்சி 2இல் தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கும் உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.