மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் ஆகியோர் அமர்வில் நேற்று(மார்ச் 17) விசாரணைக்கு வந்தது. அப்போது முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மரங்களை வெட்டுவதற்கான விருப்பங்களை கோரி அறிவிப்பு வெளியிட்டும், யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பிற மாநில அதிகாரிகளையும் அழைத்து அயல்நாட்டு மரங்களை அகற்ற ஆலோசனைகள் பெற்றுவருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நீதிபதிகள், அயல்நாட்டு மரங்களை அகற்றும் வழக்கில் நான்கு ஆண்டுகளாக முழுமையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அறிக்கைகள் மட்டுமே தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த அறிக்கையிலும் திருப்தியில்லை. 700 ஹெக்டேர்களில் அயல்நாட்டு மரங்கள் இருப்பதாக உயர் நீதிமன்ற குழு காண்டறிந்துள்ளது. ஆனால் அந்த குழுவிடம் அரசு விவரங்கள் கேட்கவில்லை. நாங்கள் அரசிடம் ஆக்கப்பூர்வமான பணியை எதிர்பார்க்கிறோம். ஒரு திட்டத்தைத் தொடங்கவே இத்தனை ஆண்டுகள் தேவையென்றால், அகற்றுவதற்கு எத்தனை ஆண்டுகளாகும்.
அயல்நாட்டு மரங்களை அகற்றுவதில் தமிழ்நாடு அரசும், வனத்துறையும் சாதகமான பாதையில் செல்லவில்லை. அதனால்தான் இதுவரை ஒரு ஏக்கரில் கூட மரங்கள் அகற்றப்படவில்லை எனத் தெரிவித்தனர். இதையடுத்து விரிவான தெளிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு!