பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சனம், டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் தேர்வில் மிகப்பெரிய ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும்; ஏழை, எளிய மாணவர்கள் லட்சக்கணக்கானோர் செலவு செய்து பயிற்சி மையங்களுக்குச் சென்று, படித்து வரும் நிலையில் இவ்வளவு பெரிய முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 99 பேருக்கு பணி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் போட்டித் தேர்வுகள் எழுதத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடியினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், குரூப் தேர்வில் முறைகேடு செய்ய உடந்தையாக இருந்த 16 பேரும் குரூப்-2 தேர்வில் முறைகேடு நடக்க உதவியாக இருந்த 42 பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகளை எடுக்குமாறு டிஎன்பிஎஸ்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 'டிஎன்பிஎஸ்சி என்பது தன்னாட்சி அமைப்பு, அதில் அரசு தலையிடாது. இருப்பினும் நடைபெற்ற முறைகேடுகளை மறைக்கவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
இதையும் படிங்க:
டிஎன்பிஎஸ்சி வழக்கில் நிதித்துறை உதவியாளர் முன் பிணை மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம்