கடந்த சில நாள்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கரோனா தொற்று உறுதியானது.
சந்தோஷ் பாபு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நிலையில், அவரால் தேர்தல் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. கட்சியின் வேட்பாளருக்கே கரோனா தொற்று ஏற்பட்டதால், நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக அந்தத் தொகுதியில் கட்சியின் சார்பில் தேர்தல் பரப்புரை முடங்கியுள்ளது.
தொற்று பாதிப்பு அதிகரிக்க காரணம்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக அரசியல் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள், பேரணிகள் என்று சொல்லப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசங்கள் அணியாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் பங்கேற்பது தொற்று பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ்
தேமுதிகவின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் (மார்ச் 21) அனுமதிக்கப்பட்டார்.
முக்கிய நிர்வாகிகளுக்குத் தொற்று
கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள சுதீஷ், தேர்தல் சம்பந்தமான கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுவேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இருப்பினும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும்விதமாக அவர் மார்ச் 26ஆம் தேதியிலிருந்து தீவிர பரப்புரையில் ஈடுபடுவார் எனக் கட்சியின் தலைமை அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் அண்ணா நகர் வேட்பாளர் பொன்ராஜுக்கும் தொற்று இருப்பது நேற்று (மார்ச் 22) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திமுகவின் சோழிங்கநல்லூர் வேட்பாளர் ரமேஷ் அரவிந்துக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருக்கும் நிலையில், அவர் அடுத்த சில நாள்கள் தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலம் (மேற்கு) தொகுதியில் தேமுதிக சார்பில் களம் காணும் அழகாபுரம் ஆர். மோகன்ராஜுக்கும் இன்று (மார்ச் 23) காலை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஆர். ராதாகிருஷ்ணன் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், "பேரிடர் மேலாண்மைச் சட்டம், சுகாதாரத் துறை வழிகாட்டுதல் ஆகியவற்றின்படி அனைத்து வழிமுறைகளும் வேட்பாளர்கள் உள்பட எல்லோருக்கும் பொருந்தும்" என்று கூறினார்.
எல்லா மாவட்டங்களின் தேர்தல் அலுவலர்கள் இந்த வழிமுறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மநீம கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நம்மிடம் தொலைபேசி வாயிலாகக் கூறியதாவது:
எங்களது கட்சி வேட்பாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும், அவர்கள் இணையதளம் மூலமாகப் பரப்புரையை மேற்கொள்கின்றனர். இவர்கள் விரைவில் குணமடைந்து தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்.
தொண்டர்கள் மக்களிடம் தேர்தல் பரப்புரை மட்டும் செய்யாமல் கரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’தேர்தல் போக்கு விமர்சனங்களில் எங்கள் பங்களிப்பு இல்லை’ - லயோலா கல்லூரி முதல்வர் பகீர்