சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 9ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தாக்கல் செய்யப்பட்ட 2019-20ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் குறித்த மாணியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தன.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மீதமுள்ள அனைத்து மானியக் கோரிக்கைகளும் நாளை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார். சட்டப்பேரவை அவை முன்னவரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கொண்டுவந்த இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
"ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற வேண்டிய மானிய கோரிக்கைகள் மற்றும் இதர சட்ட முன் வடிவுகள் அனைத்தும் நாளை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மேலும் நாளை கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும்" என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்
அதன்படி, கோவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ளது.