இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், “கரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக சென்னை மெரினா உள்ளிட்ட பகுதியில் வழக்கமாக கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
விபத்தில்லா பாதுகாப்பான பண்டிகைக்கான நடவடிக்கை ஆண்டுதோறும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களின் போது இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வோர் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது சென்னை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபட்ட 225 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதே விதிமுறைகள் வரும் புத்தாண்டு தினத்தன்றும் பின்பற்றப்படும். வாகனங்களில் பயணம் செய்வோர் தீவிரமாக கண்காணிக்கப்படுவர். குடும்பத்துடன் தேவாலயங்கல் மற்றும் கோயிலுக்கு செல்பவர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
பைக் ரேஸ், அதிவேகமாக பயணம் செய்தல் மற்றும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இந்த நடவடிக்ககையானது இப்போதிலிருந்தே தொடங்கப்பட்டு, புத்தாண்டு தினத்தின் நள்ளிரவு வரை தொடரும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் மேற்பார்வையில் இணை ஆணையர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர், பாண்டியன், லட்சுமி, துணை ஆணையர்கள் செந்தில்குமார், அசோக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் சென்னை முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கிறித்துமஸ், புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்துக்கு தடை விதித்திருப்பது ஜனநாயக படுகொலை - எஸ்டிபிஐ நெல்லை முபாரக்!