கரோனா பரவலில் முக்கிய முன்களப் பணியாளர்களாகச் செயல்படுபவர்கள் காவல் துறையினர், கரோனா ஒவ்வொரு அலையின்போதும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பொதுமக்களிடம் கரோனா பரவல் ஏற்படாமல் இருக்க களத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனால் பல்வேறு காவல் துறையினர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த மூன்று அலைகளில் 8030 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு 143 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது அலையிலும் காவல் துறையில் கரோனா வேகமாகப் பரவிவருகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்றுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
இதில் ஆறு ஐபிஎஸ் அலுவலர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று (ஜனவரி 9) ஒருநாள் மட்டும் தமிழ்நாடு காவல் துறையில் 100 பேரும், இரண்டு ஐபிஎஸ் அலுவலர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் கூடுதல் ஆணையர் உள்பட 70 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. அரசு தெரிவித்தபடி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காவல் நிலையங்கள் செயல்பட்டுவருவதாகவும், காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாகத் தகவல் அளிக்க தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கரோனா பெரிதும் பாதிக்கப்பட்ட காவலர்கள் வீடுகளுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பெரிதும் பாதிக்கபடாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் பாதிக்காமல் இருப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் துறையினரும் இரண்டு தவணை தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள ஏற்கனவே தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாது இரண்டு தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு ஒன்பது மாத காலம் ஆகிய காவலர்களுக்கு உடனடியாக பூஸ்டர் தடுப்பு ஊசிகள் இன்றுமுதல் போடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சூரப்பா வழக்கின் தீர்ப்பு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு