பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ஆம் தேதி தொடங்கி, 25ஆம் தேதிவரை நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்புக்காக, பள்ளிகளை சுத்தம் செய்வது, தேர்வு அறைகளில் கிருமி நாசினி தெளிப்பது, மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், தேர்வு எழுத வரும் மாணவர்களின் உடல் வெப்பத்தை சோதித்த பின்னர், தேர்வு மையத்திற்குள் அவர்களை அனுமதிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அனுப்பியுள்ள கடிதத்தில், ”பொதுத்தேர்விற்காக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கான இருக்கை வசதி போதுமான அளவில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.
கூடுதலாக வகுப்பறைகள் தேவைப்பட்டால் அருகிலுள்ள நடுநிலை, தொடக்கப்பள்ளிகளிலிருந்து இருக்கைகளைப் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வெப்பநிலை பரிசோதனைக் கருவிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது வேறு நிதியிலிருந்து வாங்க வேண்டும்“ என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அளித்துள்ள விளக்கத்தில், ”தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 12 ஆயிரத்து 500 மையங்களில் மாணவர்கள் எழுதவுள்ளனர்.
மேலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, அனைத்து தேர்வு மையங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள சிறப்புத் தேர்வு மையங்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் வெப்ப பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட உள்ளன.
எனவே, வெப்ப சோதனைக் கருவிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து வாங்கத் தேவையில்லை.
மாணவர்களுக்குத் தேவையான கருவிகள் அனைத்தும், தேர்விற்கு முன்னர் பள்ளிகளுக்கு வழங்கப்படும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அனுமதி உபரிக்கு... அள்ளுவதோ சவுடு! ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!