சென்னை: தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவை சேர்ந்தவர் வசந்தா (68).
இவர் கொருக்குப்பேட்டை ராமானுஜம் கூடம் என்ற தெருவில் நடந்து சென்றபோது, அவரிடமிருந்த 4 3/4 சவரன் நகையை ஒருவர் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வசந்தா கொடுத்த புகாரின்பேரில், கொருக்குப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது நகையை பறித்துச்சென்ற நபர் தன்னுடைய மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுச்சென்றது தெரியவந்தது.
அந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து விசாரணையை தொடங்கிய காவலர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டது, தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான ரமேஷ் (40) என்பதும், அவர் தற்போது ஏழுகிணறு பகுதியில் வாடகைக்கு இருப்பதையும் கண்டறிந்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் வீட்டிற்குவந்த ரமேஷை கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்திருப்பதால் தவறு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடமிருந்த 4 3/4 சவரன் நகையையும் பறிமுதல்செய்து, வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'வேன்-லாரி நேருக்கு நேர் மோதல்: 16 பேர் படுகாயம்'