துபாயிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு விமானம் இன்று (மார்ச்.25) அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்து, மீண்டும் காலையிலேயே சென்னையிலிருந்து உள்நாட்டு விமானமாக டெல்லிக்கு புறப்பட்டு செல்லவிருந்தது. அதற்கு முன்னதாக ஏா்இந்தியா ஊழியா்கள் விமானத்திற்குள் ஏறி, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள தண்ணீா் தொட்டிக்குள் பாா்சல் ஒன்று இருந்ததைக் கண்டுபிடித்தனா்.
இதையடுத்து ஏா்இந்தியா ஊழியா்கள், விமானநிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனா். தொடர்ந்து, உடனடியாக பாதுகாப்பு அலுவலர்கள் மெட்டல் டிடக்டருடன் விரைந்துவந்து, தண்ணீா் தொட்டிக்குள் கிடந்த பாா்சலில் வெடிகுண்டு எதுவும் உள்ளதா என்று சோதனையிட்டனா். வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்ததையடுத்து, பாா்சலை எடுத்து பிரித்துப் பாா்த்தனா். அதனுள் பெரிய தங்க செயின், தங்கவளையங்கள் இருந்தன. பின்பு அதை விமான நிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனா்.
சுங்கத்துறையினா் நகைகளை ஆய்வுசெய்ததில், அவைகளின் மொத்த எடை 408 கிராம், மொத்த மதிப்பு 19 லட்சம் ரூபாய் எனத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து தங்கநகைகளை விமான கழிவறை தண்ணீா் தொட்டிக்குள் மறைத்துவைத்து சென்ற கடத்தல் ஆசாமியை தேடிவருகின்றனா்.