சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுப்பையா. இவர் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார்.
சென்னை நங்கநல்லூரில் கடந்த 2020 ஜூலை மாதம், அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்சனை காரணமாக, தனது எதிர் வீட்டு மூதாட்டியின் வாசல் முன்பு சுப்பையா சண்முகம் சிறுநீர் கழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. அத்துடன், அவர் தான் பயன்படுத்திய முகக் கவசத்தையும் அம்மூதாட்டியின் மீது வீசிய வீடியோவும் வெளியானது.
இதையடுத்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ஆபாசமாக பேசுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின் சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பையா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணை வந்தது. அப்போது, இரு தரப்பிலும் சமரசமாக சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் டாக்டர் சுப்பையா தரப்பில் வாதிடப்பட்டது. இது ஏற்றுக் கொண்ட நீதிபதி டாக்டர் சுப்பையா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மூதாட்டி வீட்டில் கோபித்துக் கொண்டு 30 கி.மீ பயணம்