கரோனா வைரஸ் பொதுமக்களை தாக்காமலிருக்க சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினியை தண்ணீரில் கலந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்களில் தொட்டிகள் வைத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான கடைகள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினந்தோறும் தெளித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்காக கிருமி நாசினி அறை திறக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் அலுவலகத்திற்கு வரும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அலுவலக நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிருமி நாசினி அறை வழியாக அலுவலகத்திற்குள் சென்று வருகின்றனர்.
பல்வேறு இடங்களுக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க இந்த கிருமி நாசினி அறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் முதல்கட்டமாக தற்போது நகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இது போன்ற கிருமி நாசினி அறை வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.