தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, “பள்ளிகள் தரம் உயர்த்தப்படாமல் இருப்பதால் வேறு பள்ளிகளுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. அதற்கு போதுமான டவுன் பஸ் வசதியும் இல்லை. எனவே பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும்” என்றார்.
இதையடுத்து பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, “உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு ரூபாய் ஒரு லட்சமும், மேல்நிலை பள்ளியாக உயர்த்துவதற்கு ரூபாய் இரண்டு லட்சமும் பொதுமக்கள் திரட்டிக்கொடுக்கும் நிலை உள்ளது. ஆனால் எஸ்எஸ்ஏ போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசே நிதி அளித்துவிடுகிறது. 34 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த இரண்டு லட்சம் பெறுவது அவசியமில்லை. எனவே பொதுமக்கள் பங்கீட்டுத் தொகையை அரசே வழங்கி விலக்கு அளிக்கவேண்டுவம்” என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “மலைவாழ் கிராமப்புற பள்ளிகளுக்கு பொதுமக்கள் பங்கீட்டு தொகையில் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் பொதுமக்கள் பங்கீட்டு தொகையிலிருந்து விதி விலக்கு வேண்டும் என்று உறுப்பினர் தெரிவித்த கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் கவனதிற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பள்ளிகளைத் தரம் உயர்த்துவது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.