ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்கு 1,83,341 பேரும், தாள் 2 எழுதுவதற்கு 4,20,815 பேரும் என 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தகுதித் தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பெண்கள் பலரும் தங்களது கணவர், குழந்தைகளுடன் வந்திருந்தனர். தேர்வு அறைக்குச் செல்லும்போது தங்களது குழந்தைகளை உறவினர்களிடமும், கணவரிடமும் ஒப்படைத்துவிட்டுச் சென்றனர். குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட கணவன்மார்கள் மனைவி வரும் வரை குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டனர். குழந்தைகளுக்கு கார்ட்டூன் படங்களைக் காட்டி உணவு ஊட்டியும், குழந்தைகளைத் தனது மார்பில் போட்டு தூங்க வைத்தும் முழுவதும் தாயாகவே மாறிய பல தந்தைகளை தேர்வு அறைக்கு வெளியே காண முடிந்த காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது.