இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகக் கைவிட வேண்டும். 50 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பெற்று வந்த ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாக 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
ஆசிரியர் நியமன வயது வரம்பைத் தமிழக அரசு 40 ஆகக் குறைத்து ஆணையிட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும். ’கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். 2020-21 ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்தி பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணைகளை வழங்கிட வேண்டும். பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பு ரத்து ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பிப்ரவரி 20 ஆம் தேதி, சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் ’தர்ணா போராட்டம்’ நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனா தொற்று தடுப்பூசிக்கு தனி வரி போடக்கூடாது' - மருத்துவர் ரவீந்திரநாத்