தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில் தற்போது கார்காலம் முடிந்து, குளிர்காலம் நிலவி வருகிறது. இதன் அறிகுறியாக, சில மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. மேலும் சில மாவட்டங்களில் பருவமழை பெய்வதற்குப் பதிலாக, பனிப்பொழிவே நிலவி வருகிறது. பகலில் வெப்பம், இரவில் குளிர் என்று காலநிலை மாறி மாறி நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, குறைந்தபட்ச வெப்பநிலையாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 10.1 டிகிரி செல்சியஸாகவும்; நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ( உதகை ) 10.9 டிகிரி செல்சியஸாகவும் குன்னூரில் 15.3 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக பரங்கிப்பேட்டையில் 33.0 டிகிரி செல்சியஸாகவும்; திருச்சியில் 32.6 டிகிரி செல்சியஸாகவும் கரூர் மாவட்டம் பரமத்தியில் 32.5 டிகிரி செல்சியஸாகவும் மதுரையில் 32.0 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.