இதுகுறித்து அதன் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
"பணிஓய்வு பெறும் நாளில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியனை தற்காலிகப் பணி நீக்கம் செய்வது என்பது அரசு விதிகளுக்கு முரணான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறான நடவடிக்கையாகும். சுப்பிரமணியனை பணிநீக்கம் செய்ததன் மூலம் தமிழ்நாடு அரசு 14 லட்சம் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அச்சுறுத்தும் செயலில் இறங்கியுள்ளது.
பொய்யான காரணங்களைக் கூறி உள்நோக்கத்துடன் தற்காலிகப் பணிநீக்கம் செய்து அவரது ஓய்வுக்காலப் பலன்களைத் தடுத்து நிறுத்தும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரின் நடவடிக்கையானது மிகவும் மோசமான நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கையானது தமிழ்நாடு அரசிற்கும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் இடையே இணக்கமற்ற போக்கையே ஏற்படுத்தும் என்பதைத் புரிந்து கொண்டு உடனடியாக சுப்பிரமணியன் மீதான பழிவாங்கும் தற்காலிகப் பணிநீக்க நடவடிக்கையை ரத்து செய்திட வேண்டும்.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் மீதான தற்காலிகப் பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து ஜூன். 6 ஆம் தேதி மாலை மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.