திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டம், கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயாவின் 33 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, புதிய பள்ளிக்கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. சேவாலயா நிறுவனத் தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ், எழும்பூர் ஐ.பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளிக் கல்வித்துறை கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் கலந்துகொண்டு தொடக்கப்பள்ளி கட்டிடத்தைத் திறந்து வைத்தனர்.
ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர்
பின்னர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும் போது, "மாணவர்களுக்குப் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்/ பெற்றோர்களை விட ஆசிரியர்களிடம் மட்டுமே மாணவர்கள் அதிக நேரம் இருக்கிறார்கள்; ஆசிரியர்கள் அனைவருமே மாணவர்களுக்கு இரண்டாவது பெற்றோர் தான். மாணவர்கள் மீது உள்ள அக்கரையில் தான் ஆசிரியர்கள் கண்டிக்கிறார்கள். ஆகவே அதை உணர்ந்து மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும்" என்றார்.
கரோனோ தடுப்பு நடவடிக்கை
"மேலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அனைவரும் அரசு விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்றார். மாணவர்கள் கரோனோ தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனைக் கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அவசியம்
அவர்கள் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழுது அடைந்த கட்டிடத்தின் மின் சாதனம், மேஜை, நாற்காலிகள் சுற்றுப்புறப் பகுதி உள்ளிட்டவற்றைப் பழுது பார்த்து, பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?