இதுகுறித்து ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசாணை எண் 217 பணிநிரவல் பற்றியும், அரசாணை எண் 218 பொது மாறுதல் விதிமுறைகள் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் பிடிவாதம் நாள்தோறும் இறுக்கமாகி வருகிறதே தவிர, தளரவில்லை என்பதை உணர முடிகிறது. ஒரு இடத்தில் ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு மாறுதல் விண்ணப்பம் கோரும் வாய்ப்பு நடைமுறையில் இருந்து வந்தது. பதவி உயர்வில் சென்றவர்களுக்கு அந்த ஓராண்டு கூட கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. தற்போதைய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பொறுப்பேற்றதற்கு பின்னர் ஓர் ஆண்டு இரண்டாண்டு ஆனது. தற்போது மூன்று ஆண்டுகளாகக் கூடுதலாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2019ல் வெளிவந்துள்ள அரசாணையில் 1. 6.2019 அன்று 3 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் மட்டுமே மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை அளிப்பதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மனமொத்த மாறுதலானாலும், பதவி உயர்வில் சென்றவர்களானாலும், பணியிட மாற்றம் கோருபவர்ளாக இருந்தாலும் மூன்றாண்டுகளாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
புதிதாக திருமணமான தம்பதிகளானாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியாற்றி வந்தாலும் மூன்றாண்டு காலம் அவர்கள் தொலைவில் இருந்து தான் பணியாற்ற வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடியில் பணிபரிபவர்களுக்கு (எல்கேஜி, யூகேஜி) மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
வட்டார கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கு மாறுதல் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு இல்லையா? நேரடி நியமனத்தின் மூலம் 97 பணியிடம் நிரப்பப்பட வேண்டும். ஆனால் தற்போது 55 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. இன்னும் 42 இடங்கள் காலியாக்கப்பட வேண்டும். அதனால்தான் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. மூன்று மாதத்திற்குள்ளாக நேரடி நியமனத்தினை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறையும், ஆசிரியர் தேர்வு வாரியமும் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.
பணித்தொகுப்பில் 100 இடம் இருந்தால்தான் மாறுதல் கலந்தாய்வு உண்டு என்பதில் குழப்பம் எதுவும் இல்லை. ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கலந்தாய்வு நடப்பதற்கு வாய்ப்பு இருந்தால் 100 இடங்கள் காலியாக இருக்க வேண்டும் என்று அரசாணை உறுதிப்படுத்துகிறது. அப்படி ஒன்றும் நடைபெறப் போவதில்லை.
இந்த மாறுதல் விதிகளில் ஏற்றுக் கொள்ளவே முடியாதது ஒன்று உண்டு என்றால் நிர்வாக மாறுதலை எந்த நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் செய்வதற்கு அதிகாரம் உண்டு. அதற்கு காரண காரியம் தேவையில்லை, விண்ணப்பம் தேவையில்லை, பழி வாங்க நினைத்தால் பழி வாங்குவதற்கும், வியாபார நோக்கில் செயல்பட நினைத்தால் செயல்படும் சூழலும் ஏற்படும்.
கூடுதல் பணியிடம் என ஒரு இடத்தில எடுக்கிற போது ஆசிரியர் அந்த இடத்தில் பணியாற்றாமல் காலிப்பணியிடமாக மட்டுமே இருப்பின், அந்த பணியிடத்தை பணி தொகுப்பிற்கு கொண்டு செல்ல வேண்டும். அந்தப் பணித் தொகுப்பு இடத்தில் வேறு ஒருவரை நியமனம் செய்ய முடியாது. தொடக்கக் கல்வி துறையிலும், பள்ளிக் கல்வித் துறையிலும் 19,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நினைவுப் பணியிடங்களாக மாற்றுகிற அபாயத்தை உருவாக்கி வருகின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.