சென்னை: கே.கே. நகரில் உள்ள தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின்போது, பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்து புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தப் புகாரின் அடிப்படையில், அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர், பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, அவரது பிணை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து அவர் மீது புகார்கள் குவிந்த நிலையில் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆர். சுதா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆட்கொணர்வு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று சுதா உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில் தனது கணவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் உள்ளதாகவும், எனவே கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்ட அவர், எனவே வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அன்புமணி மகள் திருமண வரவேற்பு - முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவருக்கு நேரில் அழைப்பு