சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSc & AH) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (பிடெக்) (உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கைக்குத் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து செப்டம்பர் 9ஆம் தேதிமுதல் அக்டோபர் 8ஆம் தேதிவரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (கலையியல் பிரிவு -BVSc AH (Academic) பிரிவில் 22 ஆயிரத்து 240 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 21 ஆயிரத்து 899 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
தகுதிபெற்ற மாணவர்களின் விவரம்
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (தொழிற்கல்வி BVSc AH (Academic) பிரிவில் 248 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில், 245 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
பிடெக் (உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு) ஆகியவற்றுக்கு நான்காயிரத்து 410 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் நான்காயிரத்து 315 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்த 26 ஆயிரத்து 898 மாணவர்களில் 26 ஆயிரத்து 459 தகுதிபெற்றுள்ளனர். தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் பிப்ரவரி 2 (புதன்கிழமை) அன்று வெளியிடப்படும்.
பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு
தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியலைப் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in) பிப்ரவரி 2 காலை 10 மணி முதல் காணலாம்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும் என மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீட் வெற்றி: 7.5% இட ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை!