சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப் 19ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமாக வாக்களித்து சென்றனர்.
சென்னை மாநகராட்சியில் மொத்தமாக 200 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மதியம் மூன்று மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் மற்ற மாநகராட்சிகளில் 50 விழுக்காட்டிற்கும் மேல் வாக்குகள் பதிவாகின. ஆனால் சென்னையில் 31.89 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகின. அடுத்த இரண்டு மணி நேரத்தில் கூடுதல் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மாலை 5 மணி நேர நிலவரப்படி, 41.68 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பாதிவாகின. இறுதியாக சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே 43.59 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் சென்னையில் மட்டுமே குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; 60.70% வாக்குப்பதிவு